குருவியின் சேதி தெரியுமா?

குருவி தோட்டத்து மதிலில் அமர்ந்து தன் கீச்சுக் குரலில் உல்லாசமாக “சேப், சேப், சேப்” என்று சத்தமிட்டது. அதன் அர்த்தம் “எனக்குப் பசிக்கிறது. கொஞ்சம் சாப்பாடு வேண்டும் “ என்பதாகும்.

தனது பஞ்சு போன்ற சிறிய மார்பை வெளித் தள்ளிப் பலமுறை அது கத்திய போதும் யாருக்கும் அந்தக் குரல் கேட்டதாகத் தெரியவில்லை. அது ஒரு பின் பனிக்காலக் காலை வேளை. மார்கழிக் குளிரில் சிட்டுக் குருவிக்கு நல்ல பசி.

மழை வேறு சரமாரியாகப் பொழிந்து தள்ளிப் பல பிரதேசங்களிலும் வெள்ளம் போட்டிருப்பதால் பலர் இடம் பெயர்ந்து விட்டார்கள். பல வீடுகளில் அடுப்பு எரியவி;லலை. சில வீடுகளில் பூனைதான் அடுப்படியில் படுத்துத் தூங்குகிறது. அதனால் குருவிக்கும் ஒரு வீட்டிலும் உணவு கிடைக்கவில்லை. தன் இன்றைய நாள் எப்படிப் போகப் போகிறது என்பதில் குருவி கவலை கொண்டது.

மதிலில் அமர்ந்திருந்த படி வீட்டை உற்றுப் பார்த்தது. குசினியின் புகைக் கூடு வழியே புகை வருகிறது. காலை நேரச் சமையலின் மணம் வேறு வருகிறது. தோசையா? அப்பமா? வெங்காயப் பொரியலா? அற்புதமான மணம். அந்த மணம் குருவியின் பசியை என்றுமில்லாதவாறு அதிகரித்து விட்டது. இந்த வீட்டுக்குக் குருவி முன்னரும் பலமுறை வந்திருக்கிறது. இந்த வீட்டில் ‘ரவி’ என்ற பெயரில் ஒரு சிறு பையன் வசிக்கிறான் என்பது குருவிக்கு நல்ல ஞாபகமாக இருக்கிறது. ரவி தன்னைக் கண்டால் தனக்குப் பசி என்று தெரிந்தால் கட்டாயம் உணவ தருவான் என்பதும் குருவிக்கு நிச்சயம். ஆனால் ஒருவரும் குருவியைக் கண்டது போலத் தெரியவில்லையே! என்ன செய்யலாம் என்று குருவி தலையை சொறிந்தது. யோசித்து யோசித்துக் களைத்தப் போனது.

இறுதியாக ஒரு சின்னத் துணிவை மனதில் வரவழைத்துக் கொண்டு வீரமாகப் பறந்து குசினி யன்னலில் அமர்ந்து சொண்டை நீட்டி உள்ளே பார்த்தது. ரவியின் அம்மா தான் காலை உணவு சமைத்துக் கொண்டிருக்கிறா. குருவி திரும்பவும் ஒரு முறை “சேப், சேப்” என்ற சத்தம் போட்டது. யாருமே கவனிக்கவில்லை. குருவிக்கு அழுகையே வந்து விட்டது. யன்னலின் உட்பக்கத்திற்குத் தள்ளி நடந்தது. படியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. சாப்பாட்டு மேசையின் விரிப்பு மிக அழகாக இருக்கிறது. மேசையில் வைக்கப்பட்டுள்ள பூச்சாடி அதைவிட அழகு. ரவி கதிரையில் அமர்ந்திருக்கிறான். அம்மா சாப்பாடு கொண்டு வருவதை எதிர்பார்க்கிறான் போலிருக்கிறது. அப்போது வீட்டின் முன் பக்கத்தில் தபால்காரன் வருவதைக் குருவி பார்க்கிறது. அவர் கம்பீரமாகச் சைக்கிளில் இருந்து இறங்கி வீட்டின் முன் பக்கமிருந்த அழைப்பு மணியை அழுத்துகிறார். “ரீங்… ரீங்.. ரீங் சத்தம் கேட்டவுடன் ரவி எழுந்து சென்று கதவைத் திறக்கிறான். தபால்காரனுக்குக் காலை வணக்கம் கூறித் தபால்களைப் பெற்று “நன்றி” சொல்லித் திரும்பி வருகிறான்.

“நல்ல விடயம். நானும் முன் பக்கம் போய் அழைப்பு மணியை அழுத்தினால் ரவி வந்து திறப்பான். திறந்தால் என்னைக் காண்பான். கண்டால் உணவு கிடைக்கும்” என்று நினைத்த குருவி ‘விசுக்’ கென்று பறந்து முன் பக்கம் வந்தது. கதவில் அமர்ந்து அழைப்பு மணியைத் தன் சிறு அலகால் கொத்தியது.. ம்.. ம்.. சத்தம் வரவில்லை. திரும்பத் திரும்ப முயற்சி செய்து பார்த்தது. சத்தம் ஏதும் வரவேயில்லை. “வேறு என்னதான் வழி? குருவி திரும்பவும் தலையைச் சாய்த்து மூளையைக் கிளறிக் கொண்டது.

திடிரென்று ஒரு எண்ணம் அதற்கு மின்னல் பொறியாகத் தட்டியது. திரும்பவும் குசினிப் பக்கம் பறந்து வந்தது. கண்களை விரித்து உள்ளே எட்டிப் பார்த்தது. இப்போது ரவியும் அம்மாவும் மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா வெளியூருக்குப் போய்விட்டார் போலும். அவர்களின் பூனை ரவியின் காலடியில் அமர்ந்து தட்டில் ஊற்றப்பட்ட பாலை நக்கிக் கொண்டிருக்கிறது. “மியா.. மியா..” குருவி யன்னல் கண்ணாடியில் தன் அலகினால் “டக், டக், டக்” என்று தட்டியது. திரும்பவும் ஒருமுறை “டக’, டக், டக்” ரவி உணவுத் தட்டில் இருந்து தலையை நிமிர்த்தி யன்னலைப் பார்த்தான். “ அம்மா அந்தச் சின்னக் குருவியைப் பாருங்கோ! யன்னல் கண்ணாடியை “டக் டக்” கென்று தட்டுது. அதுக்குப் பசிக்குது போல இருக்கு. நேற்றைய பாணிலை ஒரு துண்டு போடட்டே” என்று கேட்டான். “போடன் பழைய பாண் தானே” என்றாள் தாய். ரவி எழுந்து பாண் துண்டுடன் யன்னலடிக்கு வந்த போது குருவி சற்று வெட்கப் பட்டுப் பறந்து சுவரில் அமர்ந்து கொண்டது.

ரவி யன்னலடிக்கு வந்தான். பாண் துண்டுகளை வெளியில் எறிந்தான். மிக மிக ருசியான காலை உணவு. தன் வெள்ளை வயிறு முட்டத் தின்ற குருவி மஞ்சள் சிறகை விரித்துச் சிறகு கோதி மகிழ்ந்தது. குருவியின் கண்களில் தெரிந்த பிரகாசத்தைக் கண்டு பரவசப்பட்டான் ரவி.

அதன் பிறகு என்ன நடந்தது தெரியுமா? மழைக்காலம் முழுவதும் ரவியின் யன்னல் தட்டும் சத்தம் காலையில் கேட்கும். ரவியும் தவறாமல் உணவு போடுவான். ராமனும் குகனும் நண்பராகியது போல் குருவியும் ரவியும் சிநேகிதமாகி விட்டனர். யுன்னலில் அமர்ந்து காலை உணவுக்குக் காத்திருப்பதில் குருவிக்கு வெட்கமில்லை. குருவியை ஒரு நாள் காணாதுவிட்டால் தவித்துப் போவான் ரவி.

(கதையை வாசிக்கும் பிள்ளைகள் ராமனும் குகனும் எப்படி நண்பர்கள் ஆயினர் என்பதை ஆசிரியரிடம் கேட்டு அறிவர்.)

தமிழ் முற்றம் ஜனவரி 2015

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: webadmin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய