குருவின் உயிரில் வந்த ஏணி -2

என் கவிதை நித்திரையாய்ப் போய் விட்டாள் வெகு நேரம்

புன்னகையால் விழித்தவளைப் புரண்டு படு என்றேன்

சொன்னபடி செய்யாமல் சோம்பல் முறித்தெழுந்து

இன்றைய நாள் ஆசிரியர் தினமலவா என்றாள் .

 

கலகலத்த மழலை செல்லக் களி துலங்கும் மழலை

உலகனைத்தும் பார்க்கத் தன் உளத்திலாசை கொண்டாள்

மனிதக் கண்ணின் பார்வை மிக மந்தம் மந்தம் மட்டு

நுணுகிப் பார்த்திட்டாலும் சில நூறு மீற்றர் போகும்

 

பரந்த உலகம் முழுதும் பார்க்கும் பழக்கம் விழிக்கில்லை

இருந்தும் என்ன பயனே இந்த ஈனக்கண்களாலே

வண்மைக் கல்விதானே இதற்கு வசதியான கண்ணாம்

உண்மைக் கல்வி கண்ணே எங்கள் ஊனக் கண்கள் புண்ணே

 

கல்விக் கண்கள் பெறவோ பல காதம் ஏற வேண்டும்

எல்லை யில்லா துயரந்தன்னில் இருக்குதந்தக் கண்கள்

ஏறுதற்கோர் ஏணி இவனுக் கிருக்குமென்றால் நன்றாம்

வீறு கொண்டே ஏறிக் கல்வி மிகவும் பெற்று உயர்வான்

 

ஏணிக்கெங்கே போவோம் என்று இவன் நினைக்கும் போது

 

காணுகிறான் ஏணி ஒன்று கடுகி ஏறுகின்றான்

ஏணியாயமைந்து மழலை ஏற்றம் கொள்ள வைப்போன்

மாணுயர்ந்த குருவே அவர் மகிமை வாழ்க வாழ்க

 

கண்ணுடையர் கற்றோர் என்று வள்ளுவரும் சொன்னார்

புண்ணுடையர் முகத்தினிலே கல்லாதோர் என்றார்

ஏணியாக இருத்தல் தன்னில் இழிவு ஒன்றுமில்லை

காணில் இந்த வேலை செய்வோன் கடவுள் தன்னை ஒப்பான்

 

மரத்தில் செய்த ஏணி தன்னில் மாட்சி ஒன்றுமில்லை

தடக்கி வீழ்ந்திட் டாலும் அதற்குத் தடுக்கும் ஆற்றல் இல்லை

உயிரில் செய்த ஏணி குருவின் உயிரில் வந்த ஏணி

மருவுவோர்கள் தம்மைக் காக்கும் மாட்சி மிக்க ஏணி

 

(ஆசிரியர் தினம் -1991)

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: webadmin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய