ஆத்ம விடுதலை

இந்தப் புவியில் வந்து பிறக்கையில் ,இதயம் விரித்து அழுதேன் -நான்

எதுவும் விளங்காதழுதேன் -பின்

சொந்தமாகவே அறிவு வந்ததும் ,சொல்லிச் சொல்லி அழுதேன் -துயர்

சேரச் சேர அழுதேன்-என்

பந்த பாசங்கள் தந்த கவலையால் ,பதறிப் பதறி அழுதேன் -ஒரு

பயனுமின்றி அழுதேன்-நான்

எந்த வகையினில் அழுதல் கூடுமோ ,அந்த வகையெல்லாம் அழுதேன் -நீர்

அற்றுப்போம்வரை அழுதேன்

அன்பு செய்திட இருவர் வேண்டுமே ,அழுவதற் கொருவர் போதும் -என்

ஆத்மா தனியாய் ஏங்கும் -புவி

இன்பம் பகிர்ந்திட இருவர் தேவையே ,துன்பத்திற் கொருவர் போதும் -மனத்

துயருக்குத் துணைகள் இல்லை -அதைத்

தன் பயமின்றித் தாங்கிக் கொள்வது ,பின்வரும் பயன்களை நாடி -அதில்

பிறக்கும் நன்மைகள் கோடி -இத்

துன்பம் தொடர்ந்து வளர்ந்து வருவதில் ,தூய ஞானங்கள் தோன்றும் -அது

ஆத்ம விடுதலையாகும்

 

(யாழ் மதி -1979)

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: webadmin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய