காற்றுச் செய்த காரியம்

“ பாட்டி! நான் அந்தப் பந்தை எடுக்கலாமா?” மிகுந்த தயக்கத்துடன் கேட்டான் மகிழ்வில்லச் சிறுவர்களில் மூத்தவனாகிய முத்து. அவனை விட இளையவர்களான சிந்து, நந்து, விந்து, மிந்து நாலு பேரும் அடுத்த வீட்டில் என்ன நடைபெறுகிறது என்பதை ஒட்டி நின்றும், எட்டி நின்றும் வேலிக் கூடாகப் பார்க்கிறார்கள். துணிந்து பத்தினிப் பாட்டியின் முற்றத்தில் முத்து காலடி வைத்தது “நீல்ஆம்ஸ்ரோங்” சந்திரனில் காலடி வைத்ததற்குச் சமன். எவ்வளவு பெரிய விடயம், அது தெரியுமா? அதற்கு மிகப் பெரிய வலிமை வேண்டும்.

வேலியின் ஓலைப் பொட்டினூடாக நாலு சோடிக் கண்கள் எட்டி எட்டிப் பார்ப்பது அதனால் தான்! “பந்து… எடுக்கிறதோ? கெட்டகாலம் உனக்கு! ஓடு, வெளியே!” பாட்டியின் குரல் உச்சஸ்த்தாயியில் கோபத்துடன் கரகரக்கிறது.
“என்னுடைய பூக்கன்றுக்கிடையில் தான் எப்போதும் உங்கள் பந்து! என்னுடைய தோட்டத்தின் பழங்களைக் களவெடுக்கத் தான் பந்து என்று சொல்லிக் கொண்டு வாறது… நேற்றும் இரண்டு மாங்காயைக் காணவில்லை ஓடு! இனிமேல் யாரும் இங்கே பந்து என்று சொல்லி வந்தால் …. பொலிஸைக் கூப்பிடுவேன்…” ஜந்து நிமிடம் பந்து விளையாடிய மகிழ்வு சுத்தமாய் ஓடி ஒழிந்து விட்டது இப்போது சிந்து, நந்து, விந்து, மிந்து எல்லோரும் தென்னோலை வேலியில் இருந்து தமது கண்களை விலக்கிக் கொள்கிறார்கள்.

படை விலகுவது தவிர வேறு வழி இல்லை. “இன்று போய் நாளை வா” என்று பாட்டி கூறியிருந்தாலாவது பரவாயில்லை. “போலிசைக்கூப்பிடுவேன்” என நலிவாகக் கூறிவிட்டாள்!
சென்ற வாரமும் ஒரு பந்து பாட்டியின் தோட்டத்தில் வீழ்ந்தது. பயம் காரணமாக ஒருவரும் கேட்கவே போகவில்லை. மகிழ்வில்லத்தில் தலைவர் ஜயாவை மன்றாடி வாங்கியது இன்று தொலைந்த இந்தப் பந்து . முத்து ஒன்றும் பேசாமல் வாய் மூடி நின்றான். பாட்டி தன் கைத்தடியைத்தூக்கித் திரும்புகிறாள் கைத்தடி எட்டும் தூரத்தில் நின்றால் “அடி” விழுவது நிச்சயம். ஆடி விழுந்தால் முத்துவுக்குத் தான் வலிக்கும் முத்து என்ன சிவ பெருமானா, அவன் மேல் பட்ட அடி எல்லோருக்கும் வலிக்க?

“எங்களுடைய பந்து உங்கள் புற்றரையில் இருப்பது தெரிகிறது. நான் உங்கள் பூக்கன்றுகளைத் தொடாமலே பந்தை எடுத்திருப்பேன்” தனக்கு மட்டுமே கேட்கக் கூடியதாக முணுமுணுத்துக் கொண்டு முத்து திரும்பிவிட்டான். “எப்ப பார்த்தாலும் விளையாட்டு! விளையாட்டு! சிறுவர் இல்லத்திற்குப் பெரிய காணி வாங்கியாச்சு. வெளிநாட்டுக் காசு ! பற்றை வெட்டி விளையாடலாந்தானே! ஏன் என்னுடைய தோட்டத்திற்குள் பந்து வர வேணும்?” பத்தினிப் பாட்டி தன்னுடைய தோட்டத்தைப் பெருமையுடன் பார்த்தாள்.
ஒரு பக்கம் பூக்கள் பல வர்ணத்தில் பூத்துக் குலுங்குகின்றன. மறுபக்கம் காய்கறிகள் சமையலுக்கு இதமாகத் தொங்குகின்றன. இன்னொரு பக்கம் இருக்கும் பழமரங்கள் பறவைகளை வரவைக்கின்றன. நிலத்தில் தேவையற்ற களை ஒன்று கூட இல்லை. எவ்வளவ அழகான துப்பரவான தோட்டம்! தோட்டப் பராமரிப்புக்கு வரும் அந்தப் பித்தக் கிழவனும் மொத்தமாய்ப் பத்துநாள் இந்தப் பக்கமாய் வரவில்லை.

மாலை மூன்று மணி! கடைத்தெருவுக்குப் போய் அடுத்த வாரச் சமையலுக்கு தேவையான பலசரக்குப் பொருட்களை வாங்கி வரவேண்டும். பாட்டி கைத்தடியுடனும் குடையுடனும் கூடையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்ட போது தென்றல் வீசியது. கோடியில் பாட்டியின் உடுப்புக்கள் தொங்குகின்றன. “ மழை வராது வெறுங் காற்றுத் தான்.” தனக்குள் நினைத்துக் கொண்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு புறப்பட்ட பாட்டி, காற்று குடையைக் கொண்டு போய் விடாமல் சிக்கெனப் பிடித்துக் கொண்டாள்.

காற்று திடீரென்று பெரிதாகியது. மாருதம், சண்ட மாருதமாகியது சற்று நேரத்தில் புயல் என்று பெரும் ஊதல் சத்தத்தோடு சுற்றி விளையாடியது. “உடுப்புக்களுக்கு ஊசி குத்தினது உண்மைதான்” என்று நினைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கிய பாட்டியின் மெல்லிய உடலையே தூக்கிப் போய்விடத் துடித்தது காற்று. ஒருவாறு சமாளித்துப் பாரமான கூடையை விறாந்தையில் வைத்து நிமிhந்த போது, அவளுடைய கூனிய முதுகு நிமிர மறுத்தது.

“இது என்னுடைய தோட்டந்தானா? இதென்ன ஊழிக் கூத்தா? பூக்களும், தடிகளும், இலைகளும் தோட்டமெங்கும் சிதறிக் கிடந்தன. அவள் தோய்த்துப் போட்டிருந்த அழகான சேலை மேலே எடுத்துச் செல்லப்பட்டு வேப்ப மர உச்சியில் ஊஞ்சலாடுகிறது. மேற்சட்டை ஒன்று மகிழ்வில்லத்தின் பற்றைக்குள் விழுந்திருக்கிறது. “அட கடவுளே! இப்போது நான் என்ன தான் செய்வேன்?” பாட்டிக்குக் கண்கள் கலங்கி விட்டன. “ஜயோ” என்று அரற்றிக் கொண்டு பாட்டி நிலத்தில் அமர்;ந்து விட்டாள். ஒரு சோடிக் கண்கள் வேலிக்கு மேலே எட்டிப் பார்த்தன. அவை முத்து உடையவை! “நாங்கள் ஏதாவது உதவி செய்யலாமோ பாட்டி? “மிகத் தாழ்ந்த குரலில் முத்து கேட்டான்.

பாட்டி என்ன சொல்லப் போகிறாளோ? எப்படிக் கத்தப் போகிறாறோ என்று பயந்தவர்களாய் மீண்டும் சிந்து, விந்து, மிந்துவின் எட்டுக் கண்களும் பொட்டுக்குள் எட்டிப்பார்த்தன. “பந்து” விசயம் இலகுவில் மறந்து போகுமா என்ன? “என்னுடைய தோட்டத்தைப் பார் முத்து” பாட்டி ஏறத்தாழ அழுதுவிட்டாள்.. “நாங்கள் உள்ளே வரலாமா?” முத்து துணிந்து கேட்டு விட்டான். “வரலாம்” பாட்டி தானே இது? வானரப் படை களமிறங்கி விட்டது. இரண்டு நிமிடத்துக்குள் முத்து வேப்ப மரத்தில் ஏறிச் சேலையை விடுவித்துக் கொண்டிருந்தான். மிக இளையதான மிந்து, சொரிந்திருந்த இலைகளையும் பூக்களையும் பொறுக்கிக் கடகத்தில் போட்டான். நந்து விள்ககுமாறு எடுத்துக் கூட்டினான்.

தங்கள் பக்கம் விழுந்து சேற்றில் பட்டுக் கொண்ட சட்டையை எடுத்துத் தோய்த்து மீண்டும் கொடியில் போட்டான் சிந்து. கொட்டிக் கிடந்த பழங்களையும் காய்கறிகளையும் வேறு பிரித்து இரு பெட்டிகளில் போட்டுப் பாட்டியின் விறாந்தையில் வைத்தான் விந்து. “இன்னும் ஏதாவது செய்ய வேண்டுமா பாட்டி?” முத்து கேட்டான்.

மலர்ந்திருந்த சிறு முகங்கள் ஒவ்வொன்றையும் சிரிக்கும் கண்களையும் நீண்ட நேரம் பார்த்தாள் பாட்டி. பிறகு துப்பரவாக்கப்பட்ட தன் தோட்டத்தைப் பார்த்தாள்.

முதல் தடவையாகப் பாட்டியின் முகத்தில் சிரிப்பு! “இந்தாருங்கள் உங்கள் பந்துகள்! எடுத்து வைத்திருந்தேன்.” கொண்டு வந்து நீட்டினாள்.

கூடையில் இருக்கும் மாம்பழங்கள் சிலவற்றையும் கொய்யாப் பழங்களையும் கொண்டு போகலாம். இல்லத்தில் இருக்கும் மற்றைய பிள்ளைகளுக்கும் கொடுக்கலாம்.”.

“உங்கள் புதிய காணி துப்பரவு செய்யும் வரை நீங்கள் இங்கு வந்து விளையாடலாம்”.

மிகவும் நன்றியுடன் “பாட்டி எங்கள் பாட்டி அச்சாப் பாட்டி” குழந்தைகள் கோரஸ் பாடினர்.

இப்போது பி;ளளைகள் பாட்டியின் தோட்டத்தில் இடையிடை வந்து விளையாடுவர்.

“என்றாலும் அவர்கள் அவ்வளவு மோசமில்லை” அடுத்த வீட்டுச் சித்தருக்குப் பாட்டி சொன்னாள் தான் வீசி அடித்ததால் வந்த விளைவை ரசித்தபடி பாட்டியின் தலைமயிரை பூசிப் பார்த்தது காற்று.

(கதையைப் படித்த பின் சந்திரனில் கால் வைத்த  நீல் ஆம்ஸ்ரோங் பற்றியும் “ இன்று போய் நாளை வா” என்று கூறியது யார் என்பது பற்றியும் சிவன் போட்ட அடி எல்லோருக்கும் பட்டது எப்போது என்பது பற்றியும் பிள்ளைகள் ஆசிரியரைக் கேட்டு அறிந்து கொள்வார்.)

தமிழ் முற்றம் நவம்பர் 2014

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: webadmin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய