இத்தா 

மெலிந்து வெளிறிய உடலில் குறுக்குக் கட்டுத்தான் உடுப்பு. கணவர் சுப்பிரமணியம் (அம்மப்பா ) 1947 இல் காலமாகிவிட்டதால், நான் பிறக்கும்போதே விதவையாய் இருந்த இத்தா, கணவரை இழந்த கைம்பெண் வெள்ளைச் சேலைதான் உடுக்க வேண்டும் என்ற அன்றைய சம்பிரதாயத்தை ஒருபோதும் மீறியதில்லை. வீட்டிலே வேலை செய்து கொஞ்சம் மண்ணிறமாகிப்போன வெள்ளைச் சேலை, வெளியே செல்லும்போது கொஞ்சம் வெள்ளையாய் இருக்கும் வெள்ளைச் சேலை! அவ்வளவுதான் வித்தியாசம் !
      இத்தாவை எப்போதும் நினைவூட்டுவது அந்தக் கடுக்கன். இப்போதைய ‘ஜிப்ஸி ‘போல –ஒன்றல்ல, ஐந்து! நீள் வட்டமாய்-நடுவில் மொத்தமாய் -ஓரங்களில் ஒடுங்கி –ஐந்து பெரீய வளையங்கள்! அந்த ஐந்திலும் கூட, நடுவில் தொங்குவது பெரிதாய், அடுத்தது கொஞ்சம் சிறிதாய், அடுத்தது இன்னும் சிறிதாய் –அப்படி ஒரு ஒழுங்கு !அவ்வளவு பாரத்தையும் (மனதிலும் ?)பல வருடங்களாகத் தாங்கித் தாங்கி –இப்போது அறப்போவது போல் பெரிய துவாரத்துடன் அசையும் காது !
     இவரின் தமக்கையார் ‘சின்னக்காவின் இத்தா ‘-அவவும் அதே காதணியுடன் !நான் அறிந்த பருவத்தில் சின்னக்காவின் இத்தா கொஞ்சம் கூனிப்போய் ஒரு பொல்லுடன் வருவா .இத்தாவின் முதுகெலும்பு இறுதிவரை நிமிர்ந்தே இருந்தது. வாழ்விலும் பெரீய பாரங்களைச் சுமந்தவர்.ஒன்பது பிள்ளைகளைப் பெற்று,அவர்களில் ஆறு பேரை சிறு வயதுகளிலேயே பறி கொடுத்தவர். பிள்ளைகளில் (இறந்த )ஐவர் ஆண்கள் (பஞ்ச பாண்டவர் )ஒருவர் பெண்.அவர்கள் எல்லாம் வாழ்ந்திருந்தால் எனக்கு ஐந்து மாமா ,ஐந்து மாமி ,பல மச்சான் மச்சாள் மார் எல்லாம் இருந்திருப்பார்கள்.ஆறு பிள்ளைகள் வருத்தம் வந்து ஒன்றுக்குப் பின் ஒன்று சாக ,எஞ்சியது அம்மா ,ஆசையம்மா ,சின்னம்மா !
இத்தாவின் கைத்தோலைத் தடவிப் பார்த்தால் ,மெது மெதுவாய்ச் சுருக்கங்கள் விழுந்து அருமையாய் இருக்கும் .(இப்போது எனக்கும் கொஞ்சம் அப்படி வந்துவிட்டது.)சிறு வயதில் இத்தா அவிக்கிற வெள்ளைப் பிட்டும் சம்பலும் மாதிரி –அவ சுடுகிற சர்க்கரை ரொட்டி மாதிரி –என் நாக்கு வேறு எதையும் சமன் செய்ய மறுக்கிறது.அது கைராசியும் அன்பும் சேர்த்து வரும் ருசி !
காலையில் நாலு மணிக்கு எழுந்து உரல் உலக்கையில் அரிசி இடிப்பு நடக்கும்.இடித்த அரிசியை அரித்து ,வறுத்து ,பிட்டு அல்லது இடியப்பம் அவித்து நாங்கள் பாடசாலை போக முதல் உணவு தயாராகிவிடும் .மதிய உணவுப் பார்சலும் மேசையில் இருக்கும் .சமையலுக்குத் தேவையான விறகு முதல் நாளே ‘விறகம்பாரத்தில் ‘இருந்து எடுத்து புகைக் கூட்டுக்குக் கீழே அடுக்கி ஆயத்தமாக வைத்திருப்பார்கள்.
1893 இல் பிறந்த இத்தாவுக்குப் பெயர் சின்னாச்சிப்பிள்ளை.இவரது அக்கா வள்ளிப்பிள்ளை ,தங்கை இளையபிள்ளை ,தம்பி கதிரிப்பிள்ளை என்று பெற்றோர்’ பிள்ளை ‘ குடும்பப் பெயரை நிலை நிறுத்துவதில் அக்கறை எடுத்திருந்தாலும் ,இத்தா படிக்கவில்லை. கையெழுத்துப் போட த் தெரியாது .பெருவிரல் ஒப்பம்தான் வைப்பார் .தம்பி கதிரிப்பிள்ளை மிகப் பிரபலமான பண்டிதர்.அவர் எப்படிப் படித்திருக்கிறார் என்று பார்த்தால் ,ஆரம்பத்தில் தனிப்பட ஆண்களின் திண்ணைப் பள்ளிகளில்தான் படித்துள்ளார்.பெண் பிள்ளைகளை அவ்வாறு அனுப்பாமல் இருக்க க் காரணங்கள் இருந்திருக்கலாம்.மனக் கணிதமாக சந்தைக் கணக்கு ,கடைக் கணக்கு ப் பார்க்க இத்தாவுக்கு முடியும்.தான் படிக்கவில்லை என்பது பற்றி இத்தா கவலைப் பட்டதாக எனக்கு நினைவில்லை. படித்த பெண் என்ற ஒப்பீடு கிராமத்தில் இருக்கவில்லை.குடும்பத்தைக் கொண்டு நடத்தும் சிறப்பான ஆளுமை அவரிடம் இருந்தது. -தம்பக்கிரிக் காணியில் வரகு விதைத்து அறுவடை செய்வித்து வீட்டுக்குக் கொண்டு வரும் அளவுக்கு !
1966ஆம் ஆண்டு .நான் க.பொ .த உயர் தரம் படித்துக் கொண்டிருக்கிறேன்.யூன் 24ஆம் திகதி .மாலையில் கல்லூரியில் நிறுவியவர் நினைவு நாளும் பரிசளிப்பும் .-காலையில் அதற்கான கலந்துரையாடல் -நான் கட் டாயம் போகவேண்டும் .மாணவர் தலைவிப் பதவியில் வேறு இருக்கிறேன்.வழக்கமாக எட்டு மணிக்கு வருகிற முத்துசாமியின் கார் அன்று வரவில்லை.பார்த்துப் பார்த்து நின்றுவிட்டு 8.15க்கு நடந்து போக ஆரம்பிக்கிறேன்.இது இத்தாவுக்குப் பதற்றத்தை உண்டாக்கியிருக்க வேண்டும்.அவர் படலையில் வந்து நான் குஞ்சரக்கா வீட்டு முச்சந்தியைத் தாண்டும் வரை பார்த்துக்கொண்டு நின்றுவிட்டுத் திரும்பியிருக்கிறார்.பெல் இல்லாமல் வீட்டின் வடக்கு ஒழுங்கையால் வந்து மூலையில் திரும்பிய சயிக்கிள் ஒன்று அவரைத் தொடுமளவு நெருங்கிவிட்டது. அது இரண்டாவது பதற்றமாக இருந்திருக்கவேண்டும் .இத்தாவுக்குப் பாரிசவாதம் !உடனேயே மூளாய் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்கள்.இரண்டு வாரத்துக்கு மேல் அங்கே ஒரு அறையில் தங்கி நின்று சிகிச்சை பெற்றார். அம்மா சின்னம்மா ,ஆசையம்மா மாறிமாறி அவருடன் நிற்பார்கள். சனி ஞாயிறில் நானும் நின்ற ஞாபகம்.ஏ .எல் நோட்ஸ் வைத்துப் படித்துக் கொண்டிருப்பேன்.டாக்டர் சம்பந்தர் வந்தால் ‘என்ன படிக்கிறீர் ?’என்று கேட்டு வாங்கிப் பார்ப்பார்.வைத்தியர்களுக்கு அப்படி எல்லாம் கேட்க நேரம் இருந்தது.ஒரு தனியார் வைத்தியசாலையில் இரண்டு வாரம் அறையில் தங்கி நின்று வைத்தியம் செய்யும் வசதி ஒரு ஆசிரியர் குடும்பத்திற்கு இருந்தது.காசு தருவீர்களா என்று அப்பாவைக் கேட்கவேண்டிய தேவையில்லை என்ற நம்பிக்கை அம்மாவுக்கு இருந்தது. ஆஸ்பத்திரிக் கட்டிலுக்குப் பக்கத்தில் கயிறு கட்டி அதைப் பிடித்தபடி நடக்கப் பயிற்சி கொடுத்து ,முழுமையாக நடக்கக்கூடிய நிலையில் வீடு வந்தது  பெரிய விடயம் !அதற்குப்பிறகு பத்து வருடங்களுக்கு மேல் அவர் வாழ்ந்தார். நடந்துதிரிந்து தன் வேலைகளைச் செய்யுமளவு குணமடைந்திருந்தார்.
இத்தா தன்னுடைய பிள்ளைகளை எப்படி வளர்த்தார் என்று அவரது அந்தக் காலத்திற்குச் சென்று பார்க்கவேண்டும் என எனக்கு ஆசை.அவரது கணவர் சுப்பிரமணியம் -கட்டைச் சுப்பர் என ஊரவர்களால் அழைக்கப்பட்டவர் -ஒரு விவசாயி.பெரிய உற்சாகமான உழைத்துப் பணம் சேர்க்கும் விவசாயி இல்லை. அப்படி இருந்தும் இத்தா அவரோடு மிகுந்த அன்பு காட்டியிருக்கிறார் என்று அம்மா சொல்லும் பல சம்பவங்களில் இருந்து நான் ஊகித்திருக்கிறேன்.கோபம் வந்தால் அவர் சாப்பிடாமல் படுத்து விடுவாராம்.இத்தா அவர் கால் மாட்டில் அமர்ந்து சாப்பிடும்படி கெஞ்சுவாவாம்.ஆறு பிள்ளைகளை இழந்த இழப்புத்துயரைத் தாங்கி (போதிய மருத்துவப் பராமரிப்பு இல்லாததால் ) எஞ்சிய மூன்று பிள்ளைகளையும் ஒருவரில் ஒருவர் கடும் பாசம் கொண்டவர்களாக எப்படி வளர்த்து முடித்தார் ?அம்மா ,சின்னம்மாவைத் தன் மகள் போலவே தன்னுடன் வைத்துக் கொண்டார்.என்னை விடவும் அம்மாவுக்குச் சின்னம்மாவிடம் பாசம் அதிகம் என்பதற்கு என்னால் பல  உதாரணங்களைக் கூற முடியும்.ஆசையம்மா வேறு வீட்டில் வாழ்ந்தாலும் ஒரு நாளுக்கு இரண்டுமுறை கட் டாயம் தன் சகோதரிகளைச் சந்திப்பார்.அவர்கள் மூவருக்குள்ளும் இரகசியங்கள் மிகக்குறைவு.எல்லாவற்றையும் மூவரும் மனந்திறந்து பேசிக்கொள்வார்கள் .ஒருவருக்கு வருத்தம் என்றால் மற்றவர் தாங்கிக்கொள்ளமாட்டார்.அவர்கள் தங்களுக்குள் பெரிதாக முரண்பட்டதாய் எனக்கு நினைவில்லை.இத்தகைய சகோதர பாசம் வரும்படி இத்தா எப்படிக் குழந்தை வளர்ப்புச் செய்தார் என்பது எனக்கு இன்னும் அதிசயமாகவே இருக்கிறது.
எனக்குச் சகோதரர்கள் இல்லை. இந்த ‘மூன்று சகோதரிகள் ‘மீது எனக்கு எப்போதுமே எல்லையற்ற பொறாமை உண்டு.பொறாமை என்பது கோபமும் பயமும் கலந்த உணர்வு என்று சென்றவாரமும் ஆசிரிய உளவளத்துணையாளர்களுக்குக் கற்பித்தேன்.எனக்கு வருத்தம் வரும்போது யார் என்னைப் பார்க்கப் போகிறார்கள் என்ற பயம்தான், வேறொன்றுமில்லை.
இத்தாவுக்குப் பிறகு ‘ஆடுமாட்டில்  பால் கறக்கும்’ வேலையை எங்கள் வீட்டில் யாரும் செய்யவில்லை.செம்பைக் கழுவி ,முழங்காலுக்கு இடையில் வைத்துக்கொண்டு இரண்டுகையாலும் ‘விக் விக் ‘ என்று பால் கறக்கும் அழகு இத்தாவுக்கு மட்டுமே கைவந்த கலை.நான் அதைப் பார்த்து ரசித்ததால் ,நாடகப் பயிற்சி வகுப்புக்களில் புதிதளித்தல் செய்யப் பயன்பட்டதே தவிர வாழ்க்கையில் பயன்படவில்லை.
இத்தா இறந்த பிறகும் எங்கள் வீட்டில் ஆட்டுக் குட்டிகள் நின்றன. அவற்றுக்கு உணவு போடும் வேலையை அப்பாவும் கணவரும் செய்தார்கள். ஆட்டுக் குட்டிகளுடன் விளையாட எனக்குப் பிடிக்கும்.மகனும் சிறு வயதில் விளையாடுவான். ஆனால் ஆட்டில் பால் கறக்க யாரும் முனையவில்லை.
5.5.1977 இல் எங்கள் திருமணம் நடந்தபோது இத்தா படுக்கையாகிவிட்டா.மூன்றாம் அறைக் கட்டிலில் படுத்திருந்தா.தாலி கட்டும் நேரம் அவவைத் தூக்கிக் கொண்டுவந்து ,கல்யாணப்பந்தலில் ஒரு சாய்மனைக் கதிரையில் இருத்தினார்கள்.சிறிது நேரத்தில் திரும்பக் கொண்டுபோய் படுக்க விட்டுவிட்டார்கள்.(திருமணம் எங்கள் வீட்டில் நடந்தபடியால் இது சாத்தியமாயிற்று )அப்போது சின்னம்மா குடும்பமும் கண்டியில் வேலை செய்தபடியால் இத்தாவைப் பராமரிக்கும் பொறுப்பை அம்மாதான் ஏற்றுக்கொண்டா.ஆசையம்மா வருகிற நேரமெல்லாம் உதவி செய்வதுண்டு.
2.7.1977 இல் இத்தா காலமானார். பேத்தியின் திருமணத்தைக் கண்டுவிட்ட திருப்தியோடு போயிருப்பார். இத்தா கடைசியாக என்னோடு என்ன கதைத்தார் என்று யோசித்துப் பார்க்கிறேன். நினைவு வர மறுக்கிறது.இத்தா ஒரு போதும் என் மனதைப் புண்படுத்தியதில்லை என்பது மட்டுமே அழுத்தமாய் நினைவுக்கு வருகிறது. ‘பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்’ என்பது பழைய சினிமாப்பாடல் வரி !
20.9.2018

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: webadmin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய